Wednesday, October 6, 2010

இறைவனுக்கு விண்ணப்பம்

1 comment:

  1. இறைவனுக்கு விண்ணப்பம்

    என் தந்தையின் மரணம் எங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.என் தந்தையைப் போல் உயர்ந்த (உத்தம) மனிதரை நான் இதுவரையில் கண்டதில்லை.உள்ளத்தில் அன்பும்,நடையில் கண்ணியமும்,மனதில் உறுதியும் கொண்டவர்.
    ஏழை எளியவருக்கு இல்லை என்று கூறாது அள்ளி அள்ளிக் கொடுத்தவர். நான் திருமணமாகி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது,என் காதருகே வந்து நீ திரும்பிவரும்பொழுது
    "நம்மபிச்சைமுத்துக்கு ஒரு நல்ல கத்திரிக்கோல் வாங்கி வாமா"என்று கூறினார். பிச்சைமுத்து யார் தெரியுமா?அவர்தான் என் அப்பாவிற்கும்
    என் அண்ணனுக்கும் தலைமுடியை கத்தரித்து அவர்களை மேலும் மெருகேற்றுபவர்.

    இப்படி தனக்கென்று எண்ணாது எப்பொழுதும் மற்றவர்களைக் கருத்தில் கொண்டிருப்பவர்.அவர் ஒரு தமிழ் வித்வான்,நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்.இருப்பினும் தனக்குக் கிடைக்கும் இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து மக்களின் சிந்தனையைத் தூண்டும் பல கதைகளை எழுதி மேடையேற்றியவர்.அவர் எழுதிய நான் கிறுக்கனா?,ஏழைப் பெண், சத்திரத்தில் இடமில்லை, அக்கரை சீமையிலே,மாடிவீட்டுப் பெண், பாவமன்னிப்பு இன்னும் பல...... கதைகள் நாடக மேடையைக் கண்டன.அதில் பாவமான்னிப்பே
    "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் தமிழ் திரைப்படமாக 60 களில் வெளியானது.
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மல்லிகை மணம் கமழும் மதுரை.ஆம் அதுதான் எங்களது சொந்த ஊர்.அங்கே மேடைப்பேச்சு,கவியரங்கம் , கலைநிகழ்ச்சிகள் எதுவாக இருக்கட்டும் கண்டிப்பாக என் தந்தைக்கு அழைப்பு வரும்,வந்து நிகழ்ச்சியை வழி நடத்தித்தருமாறு.பண்டிகை காலங்களில் நம்மில் பலர் பெரிய பிரமுகர்களையும் பணம் படைத்தவர்களையும் தங்கள் இல்லத்திற்கு அழைத்து உபசரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.ஆனால் என் தந்தையோ அதிகாலையில் எழுந்து. என் அம்மாவையும் எங்களையும் சீக்கிரம் சீக்கிரம் காலை உணவு தயாராகட்டும் என்று துரிதபடுத்திக் கொண்டிருப்பார். உணவு தயாரானதும் அங்கே வருபவர்கள்; எங்கள் கழிவறையை சுத்தம் செய்யும்
    கிருஷ்ணம்மாள், எங்கள் துணிகளை வெளுக்கும் பலவேசம்,எங்கள் வீதியை துப்பரவு செய்யும் முனியாண்டி, இரவில் நாங்கள் நிம்மதியாக தூங்க எங்கள் பகுதியைக் காவல் காக்கும் கோவிந்தன் ஆகியோரும் அவர்களது குடும்பத்தாரும் ஆகும். அவர்களுக்கு வயிறார உணவும் புத்தாடையும் பரிசளித்து ஆனந்த கண்ணீர் சொரிந்து உள்ளம் அகமகிழ்வார்.
    ஒரு நாள் தன்னுடைய 53 வது அகவையில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இறைவனடி சேர்ந்து, தன்னை சார்ந்தவர்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டார்.ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவாரோ இம்மாநிலத்திலே.ஆண்டுகள் பல போயினும் அவர் விட்டுச் சென்ற நினைவுகள் இன்னும் எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் உலாவருகின்றன.அன்னார் ஆத்மசாந்தி அடைய இந்த சாந்தி இறைவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete